undefined

மதுரையில் அனல் பறக்கும் அரசியல்... வேகமெடுக்கும் தொகுதி பங்கீடு ஆட்டம்!

 

மதுரை மண்டேலா நகரில் இன்று மாலை நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, அதிமுக - பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மதுரையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தேர்தல் பரப்புரைக்காகப் பிரதமர் மோடி மதுரை வருவதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், மதுரையில் உள்ள ஜிஆர்டி ஹோட்டலில் கூட்டணி கட்சிகளுக்கிடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த ரகசிய ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.

மத்திய அமைச்சர் மற்றும் தமிழக பாஜக தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய முன்னாள் அமைச்சர்கள், பாஜக: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன்.பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

எந்தெந்தக் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் மற்றும் எந்தெந்தத் தொகுதிகள் என்பதில் நிலவும் இழுபறியைத் தீர்த்து, பிரதமர் மேடை ஏறுவதற்குள் ஒரு தெளிவான முடிவுக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. மெகா கூட்டணியாகக் களம் காணும் நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றும் போது தொகுதிப் பங்கீடு குறித்த சுமுகமான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மாலை 4:30 மணிக்குத் தொடங்கும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி முன்னிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் அல்லது கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையிலான அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த முறை தனித்தனியாகப் போட்டியிட்ட கட்சிகள் இம்முறை இணைந்துள்ளதால், ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலோசனை நடைபெறும் ஹோட்டல் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் மண்டேலா நகர் பகுதி முழுவதும் போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் ஏற்கனவே மதுரையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அரசியல் நகர்வுகள் மாநகரில் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளன.