ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி... இன்று தாடகை நாச்சி மலையில் மகாதீப தரிசனம்!
பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் அமைந்துள்ள தாடகை நாச்சியம்மன் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருநாளையொட்டி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இங்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இன்று மாலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை தந்துள்ளனர். மருத்துவப் பரிசோதனை மற்றும் முன் அனுமதி பெற்ற பக்தர்கள் சோதனைக்குப் பிறகே மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளைத் துன்புறுத்தவோ, அருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
யானை, காட்டு மாடு, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அப்பகுதியில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக வனத்துறை வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்