வெறிச்சோடிய வாக்குச்சாவடி... 4 மணி நேரமாகியும் வராத வாக்காளர்கள்.. நாங்குநேரியில் இரட்டைக் கொலைக்கு நீதி கேட்டுப் பெரும்பத்து கிராம மக்கள் புறக்கணிப்பு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து கிராமத்தில் மட்டும் ஒரு சுடுகாட்டு அமைதி நிலவுகிறது. மார்ச் மாதம் நடந்த இரட்டைக் கொலைக்கு உரிய நீதி கிடைக்கவில்லை எனக் கூறி, 969 வாக்காளர்களும் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 3ம் தேதி அதிகாலை, பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் தேநீர்க் கடையின் முன் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் மாற்றுத்திறனாளியான ஜான் (42) மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி திரிநாத் கட்டா (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்கக் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் நடந்து 50 நாட்களைக் கடந்தும், அரசுத் தரப்பிலிருந்து தங்களுக்கு முறையான ஆறுதலோ, உரிய இழப்பீடோ வழங்கப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. "ஒரு மாவட்ட ஆட்சியர் கூட நேரில் வந்து எங்களைப் பார்க்கவில்லை" என்பது இக்கிராம மக்களின் முதன்மையான ஆதங்கம். பெரும்பத்து கிராமத்தில் உள்ள 290-வது வாக்குச்சாவடியில் மொத்தம் 969 வாக்காளர்கள் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியும், காலை 11 மணி வரை ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை.
கிராமத்தின் நுழைவாயிலில் "இரட்டைக் கொலைக்கு நீதி வேண்டும்; தேர்தலைப் புறக்கணிக்கிறோம்" எனப் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டுத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், "எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசுக்கு எதற்கு ஓட்டு?" என மக்கள் உறுதியாக உள்ளனர்.
சம்பவம் நடந்த போதே, தவெக தலைவர் விஜய் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, திமுக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தேர்தல் நாளில் மக்கள் எடுத்துள்ள இந்த முடிவு, மாவட்ட நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.