ஈரோடு, விழுப்புரத்தில் வாக்குப்பதிவு திடீர் நிறுத்தம் - அதிகாரிகளுடன் வாக்காளர்கள் கடும் வாக்குவாதம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஈரோடு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு சம்பத் நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால், ஒரு சில நிமிடங்களிலேயே அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுச் செயல் இழந்தது. இதனால் வாக்குப்பதிவு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. காலையிலேயே ஆர்வத்துடன் வந்த மக்கள், நீண்ட நேரம் காத்திருந்தும் இயந்திரம் சரிசெய்யப்படாததால் ஆத்திரமடைந்து தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இயந்திரத்தைச் சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியின் 182-வது வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. அங்கும் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரிசையில் நின்றிருந்த முதியவர்கள் மற்றும் பெண்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் முன்பு வாக்களிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மாற்று இயந்திரங்களை அந்தந்த இடங்களுக்குக் கொண்டு செல்ல மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பழுதான இயந்திரங்கள் மாற்றப்பட்ட பின்னரே மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் கோளாறுகளால் அந்தப் பகுதிகளில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.