வாக்காளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.... சென்னையில் வண்ணமயமான வாக்குச் சாவடிகள்!
சென்னையில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடிகளை எளிதில் கண்டறியும் வகையில் புதிய வண்ணக் குறியீடு (Colour Coding) முறையைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஒரே வளாகத்திற்குள் 10-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள இடங்களில் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள பெரிய வாக்குச் சாவடி மையங்களில் பல்வேறு வண்ணப் பாதைகள் மற்றும் குறியீடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு தனித்துவமான வண்ணம் ஒதுக்கப்படும். வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வண்ணப் பாதையைப் பின்பற்றிச் சென்றாலே நேரடியாகத் தங்களது பூத்தை அடைய முடியும். பெரிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் அலைக்கழிக்கப்படுவதைத் தடுக்க இந்தச் வண்ணக் குறியீடுகள் பெரிதும் உதவும் என்று சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்காகப் பிரத்யேக வழிகாட்டிப் பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
வண்ணக் குறியீடுகளைப் பின்பற்றுவது குறித்து வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் தரைப்பகுதியிலும் வண்ணக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. இந்த 2026 தேர்தலை 100 சதவீதம் வெற்றிகரமாக நடத்தவும், வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சென்னை மாநகராட்சி பல்வேறு நவீன முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வரும் 23-ஆம் தேதி அன்று வாக்காளர்கள் எந்தவிதச் சிரமமுமின்றித் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியும்.