பெண்கள் குறித்து அவதூறு பேச்சு - மன்னிப்பு கேட்டார் பொன்ராஜ்.. விஜய் புகாரளித்ததுமே எக்ஸ் தளத்தில் மன்னிப்பு பதிவு!
தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் தொண்டர்களை அவதூறாகப் பேசியதாகக் கிளம்பிய சர்ச்சையில், அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்பதாகப் பொன்ராஜ் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் நேற்றிரவு கமிஷ்னர் அலுவலக்த்திற்கு நேரில் சென்று புகார் அளித்த சில மணிநேரங்களிலேயே இந்த மன்னிப்பு செய்தி வெளியாகியுள்ளது.
தனது எக்ஸ் தளத்தில் பொன்ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், "எனது பேச்சால் காயம் பட்ட அந்தப் பெண்ணிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் பொதுவாக எந்தப் பெண்ணையும் அவதூறாகப் பேசவில்லை; அப்படிப் பேசவும் மாட்டேன். எனது கருத்து தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது. மன்னிப்புக் கேட்ட பின்பும் எனக்குத் தொடர்ந்து அலைபேசி வாயிலாக மிரட்டல்கள் வருகின்றன. இது நீடித்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.”
பொன்ராஜ் மன்னிப்புக் கேட்டிருந்தாலும், அவர் பயன்படுத்திய "விபச்சாரக் கூட்டம்" என்ற வார்த்தை ஒட்டுமொத்தப் பெண் இனத்தையே கொச்சைப்படுத்துவதாகத் தவெக தரப்பு இன்னும் ஆவேசமாகவே உள்ளது. எனவே, இந்த மன்னிப்பை ஏற்றுக் கொண்டு விஜய் தனது புகாரைத் திரும்பப் பெறுவாரா அல்லது சட்டப்படி நடவடிக்கை தொடருமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.