உலக ஜூனியர் தடகளம் உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா ஏமாற்றம்!

 

அமெரிக்காவின் யுஜின் நகரில் நடைபெற்ற உலக ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) தடகள சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி நாளில் இந்திய வீராங்கனைகள் பதக்கம் பெற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பெண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதிச்சுற்றில் களமிறங்கிய 19 வயது இந்திய வீராங்கனை பூஜா, 1.84 மீட்டர் உயரம் மட்டுமே தாண்டி 7-வது இடத்தைப் பிடித்தார். 1.87 மீட்டர் உயரத்தைத் தாண்ட அவர் எடுத்த 3 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

கடந்த மே மாதம் நடைபெற்ற ஆசிய ஜூனியர் போட்டியில் 1.93 மீட்டர் தாண்டித் தேசிய சாதனையுடன் தங்கம் வென்ற பூஜா, அந்தச் செயல்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியிருந்தால் இப்போட்டியிலும் பதக்கம் வென்றிருக்க முடியும்.

தங்கம்: இசோபெல் லூயிசன் ரோ (ஆஸ்திரேலியா) - 1.92 மீட்டர், வெள்ளி: லிலியானா படோரி (ஹங்கேரி) - 1.90 மீட்டர், வெண்கலம்: ஐடானோ அலோன்சா (ஸ்பெயின்) - 1.90 மீட்டர்

பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்ட இறுதிப்போட்டியில் பூமிகா நெஹாடே, தஹூரா காதுன், தனு சவுத்ரி மற்றும் தியா ஆறுமுகம் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 31.39 வினாடிகளில் இலக்கைக் கடந்து, 9-வது மற்றும் கடைசி இடத்தைப் பிடித்துத் தொடரிலிருந்து வெளியேறியது.