மீண்டும் காதலிக்க வற்புறுத்தியதாக புகார்! மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி.. அண்ணன்-தம்பி கைது!

 

 

சென்னையை அடுத்த பூந்தமல்லியில், தன்னை மீண்டும் காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படும் நிலையில், 17 வயது கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த 19 வயது ரோகித் என்ற கல்லூரி மாணவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ரோகித்தின் நடவடிக்கைகளில் மாணவிக்கு அதிருப்தி ஏற்பட்டதாகவும், இதனால் கடந்த சில மாதங்களாக அவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவியிடம் மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்துவதற்காக ரோகித் தனது 20 வயது அண்ணன் விக்னேஷுடன் அவரது வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு இருவரும் மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி, திடீரென வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ரோகித் மற்றும் அவரது அண்ணன் விக்னேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.இருவர் மீதும் போக்சோ சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.