மதுவால் என் வாழ்க்கையே சீரழிந்தது... கண்ணீர் விட்டு கதறும் பிரபல பாப் பாடகி!
பிரபல பஞ்சாபி பாப் பாடகி ஜாஸ்மின் சாண்ட்லாஸ் தனது வாழ்க்கையில் மதுப் பழக்கத்தால் சந்தித்த துயரங்கள் குறித்து உருக்கமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்தபோது தனிமை மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக அவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானார். தனது 23 வயதில் தொடங்கிய இந்த விபரீத பழக்கம் அவரது வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியதுடன் பல தவறான முடிவுகளை எடுக்கவும் காரணமாக இருந்துள்ளது. தற்போது இந்தப் பழக்கத்திலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள அவர் தனது பழைய கசப்பான அனுபவங்களை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
மது அருந்துவதால் தனிமை குறையும் என்று நினைத்த தனக்கு இறுதியில் மிஞ்சியது பெரும் ஏமாற்றம் மட்டுமே என்று ஜாஸ்மின் தெரிவித்துள்ளார். விலை உயர்ந்த மதுபானங்களை அருந்தினாலும் உள்ளுக்குள் ஒருவித வெறுமை இருந்ததாகவும் யாருமற்ற பால்கனியில் அமர்ந்து அழுத நாட்களே அதிகம் என்றும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். புகழ்பெற்ற பாடகியாக இருந்தாலும் தந்தையின் மறைவு மற்றும் குடும்ப உறவுகளில் ஏற்பட்ட விரிசல் அவரை மனரீதியாகப் பாதித்துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட மது அரக்கன் அவரது உடல் மற்றும் மன நலனைப் படிப்படியாகச் சிதைக்கத் தொடங்கியது.
சுமார் 3 ஆண்டுகள் நரக வேதனையை அனுபவித்த பிறகு ஜாஸ்மின் தனது மன உறுதியால் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டுள்ளார். உடலில் இருந்த நச்சுக்கள் நீங்கிய பிறகு தனக்கு மறுபிறவி கிடைத்தது போல் உணர்வதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தற்போது மீண்டும் இசைத்துறையில் கவனம் செலுத்தி வரும் அவர் 'துரந்தர் 2' உள்ளிட்ட பல ஹிட் பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். போதைப் பழக்கம் ஒருவரின் வாழ்க்கையை எப்படிச் சீரழிக்கும் என்பதற்குத் தனது வாழ்க்கையே ஒரு பாடம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.