பிரபல யூடியூபர் வைஷ்ணவி கொலை வழக்கில் கைதான கணவர் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக் கொலை!

 

தெலங்கானா மாநிலத்தில் பிரபல பெண் யூடியூபர் ஒருவர் வரதட்சணைக் கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட அவரது கணவர், மர்ம நபர்களால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பழிவாங்கும் நோக்கில் அரங்கேறியுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த மார்ச் 17ம் தேதியன்று வைஷ்ணவி தனது இல்லத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்தத் கொடூரச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி, ஹரி பாபுவைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். விசாரணையில், ஹரி பாபு தனது தாய் மற்றும் சகோதரர்களின் தூண்டுதலின் பேரில் கூடுதல் வரதட்சணை கேட்டு வைஷ்ணவியை தொடர்ந்து துன்புறுத்திவந்தது தெரியவந்தது.

படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரி பாபு பின்னர் விடுவிக்கப்பட்டார். எனினும், அவர் மீதான வழக்கு நடவடிக்கைகள் தொடர்ந்து நிலுவையில் இருந்தன. இதன் காரணமாக அவர் நிஜாமாபாத்தில் தனது தாயுடன் வசித்துக்கொண்டு மக்காச்சோளம் விற்று வந்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமையன்று அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் காரில் வந்துள்ளனர். அவர்கள் சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஹரி பாபுவை வழிமறித்துச் சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டுக் காரில் தப்பிச் சென்றனர். இந்தத் திடீர்த் தாக்குதலில் படுகாயமடைந்த ஹரி பாபு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொல்லப்பட்ட யூடியூபர் வைஷ்ணவியின் உறவினர்களுக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் பிற ஆதாரங்களையும் சேகரித்துத் தலைமறைவாகியுள்ள கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.