ஆபாச அத்துமீறல்... பெண் ஊழியர்களுக்கு வீடியோ அனுப்பி டார்ச்சர் செய்த இளைஞன்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், தன்னுடன் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்து வந்த அர்ஷத் சித்திக்கி (25) என்ற வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மும்பை மகாலட்சுமி பகுதியில் உள்ள ஒரு தனியார் டெலிகாலர் நிறுவனத்தில் அர்ஷத் பணியாற்றியபோது, அங்கிருந்த பெண் ஊழியர்களின் செல்போன் எண்களைத் திருட்டுத்தனமாகச் சேகரித்துள்ளார். பின்னர், வேலையை விட்டு நின்ற பிறகும், அந்தப் பெண்களுக்குத் தொடர்ந்து ஆபாசமான வீடியோக்களையும், அருவருப்பான செய்திகளையும் அனுப்பி மன ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 19 வயது இளம் பெண் ஒருவர், அர்ஷத்தின் இந்த அநாகரீகச் செயலைத் தட்டிக்கேட்ட போதும் அவர் நிறுத்தாததால், துணிச்சலுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை நடத்திய போலீசார், அர்ஷத் சித்திக்கியை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் அந்தப் பெண்ணை மட்டுமல்லாமல், அதே நிறுவனத்தில் பணியாற்றிய மேலும் மூன்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இதுபோன்று ஆபாச வீடியோக்களை அனுப்பி டார்ச்சர் செய்தது அம்பலமாகியுள்ளது.
பெண்களின் எண்களைத் தவறாகப் பயன்படுத்தி அவர்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்த அர்ஷத் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களின் கண்ணியத்தைக் குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலை செய்யும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற நபர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். தற்போது கம்பி எண்ணி வரும் அர்ஷத்திடம், வேறு ஏதேனும் ஆபாச வீடியோக்களை வைத்து மிரட்டினாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.