பௌர்ணமி, வார விடுமுறை: நாளை முதல்  தமிழகம் முழுவதும் 2200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 

 

பவுர்ணமி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. செப்டம்பர் 25, 26 ஆகிய 2 நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து மட்டும் 1,795 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. செப்டம்பர் 25-ம் தேதி 1,035 பேருந்துகளும், செப்டம்பர் 26-ம் தேதி 760 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு செப்டம்பர் 25-ம் தேதி 210 சிறப்பு பேருந்துகளும், செப்டம்பர் 26-ம் தேதி 180 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இதுதவிர, மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பவுர்ணமியை முன்னிட்டு குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக செப்டம்பர் 27-ம் தேதி 875 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட வாய்ப்புள்ளது.இதனால் பவுர்ணமி மற்றும் வார விடுமுறையில் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள், கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.