அமைச்சர் விக்னேஷ் பங்கேற்ற நிகழ்வில் அரை மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு!

 

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் சுமை மற்றும் மின் ஊழியர்கள் பற்றாக்குறை குறித்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சென்னையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு, இந்த ஆண்டில் மின் கட்டண உயர்வு இருக்காது என்று அறிவித்த அதே நாளில், திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் அரங்கேறியுள்ள மின்வெட்டுப் பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று நடைபெற்ற அரசு அதிகாரப்பூர்வ மக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக அமைச்சர் விக்னேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் விக்னேஷ் மேடையில் அமர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, விழா நடைபெற்ற அரங்கில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் தடைபட்ட போதிலும் நிகழ்ச்சி நிறுத்தப்படவில்லை. மாற்று ஏற்பாடுகள் உடனடியாகச் செய்யப்படாததால், கடுமையான வெக்கையிலும், போதிய வெளிச்சம் இல்லாத இருட்டிலும் அமைச்சர் விக்னேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து மனுக்களைப் பெற்றனர்.

இந்தத் திடீர் மின்வெட்டுப் பிரச்சினை சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்ததால், முகாமுக்கு வந்திருந்த முதியவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்தக் குறைதீர் கூட்டத்தில் தவெக கட்சியைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் வந்து குவிந்ததால், அரங்கிற்குள் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாகத் தூரத்து கிராமங்களிலிருந்து தங்களின் நியாயமான கோரிக்கைகளுடன் மனு கொடுக்க வந்த சாதாரணப் பொதுமக்கள் அமைச்சரை அணுக முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகினர் எனப் புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதிலும் நிலவி வரும் இத்தகைய தொடர் மின்வெட்டுப் பிரச்சினைகள் குறித்துப் பேசியுள்ள மின்சார வாரிய அதிகாரிகள், கோடைக்கால மின் தேவை அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளே இதற்குக் காரணம் என்றும், சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யப் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மின்சார வாரியத்தில் 65,000 காலிப்பணியிடங்கள் உள்ளதாக இன்று காலை மின்துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், ஆளும்கட்சி அமைச்சரின் நிகழ்ச்சியிலேயே அரை மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டிருப்பது மின்துறையின் உள்கட்டமைப்பு பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.