பெருவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்: 48 வீடுகள் தரைமட்டம்; 6 பேர் பலி!
தென் அமெரிக்க நாடான பெருவின் ஜூனின் பிராந்தியத்தில் உள்ள சுபாகா மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிப் பலர் காயமடைந்துள்ள நிலையில், அங்குத் தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுபாகா மாகாணத்தைப் பேரிடருக்கு உள்ளாக்கிய இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் முறையே 5.1 மற்றும் 3.7 ஆகப் பதிவாகியுள்ளன.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட 48-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. இதுதவிர 18 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.
வீடுகளை இழந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உறைவிடமின்றித் தவித்து வரும் நிலையில், அவர்களுக்கு அவசரகால நிவாரணப் பொருட்களும், தற்காலிகக் கூடாரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதைக் கண்டறிய மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிரமாகத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.