பெருவில் சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்.. 300-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிப்பு - மீட்பு பணிகள் தீவிரம்!

 

தென் அமெரிக்க நாடான பெருவின் ஆன்டீஸ் மலைப்பகுதியில் அமைந்த ஜூனின் பிராந்தியத்தில் உள்ள சுபாகா மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த 21-க்கும் மேற்பட்டோர் அவசரச் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரு நாட்டின் தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கங்கள் முறையே 5.1 மற்றும் 3.7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளன சர்வதேச புவியியல் மையங்கள் இதன் வீரியத்தை 5.5 எனவும் பதிவிட்டுள்ளன. நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் சுமார் 24 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்தது. இதனால் சுபாகா, சோங்கோஸ் பாஜோ மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டன.

அப்பகுதியில் களிமண் மற்றும் சுடப்படாத செங்கற்களால் கட்டப்பட்ட 48-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. மேலும் 18-க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்த எதிர்பாராத இயற்கைச் சீற்றத்தால் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அவசரகாலக் கூடாரங்கள், உணவுகள், குடிநீர் மற்றும் போர்வைகளை பெருவின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம் வழங்கி வருகிறது. இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதைக் கண்டறிய 250-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பசிபிக் பெருங்கடலின் "நெருப்பு வளையம்" பகுதியில் பெரு நாடு அமைந்துள்ளதால், அங்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.