10-ம் வகுப்பு மாணவனைக் கொன்றுவிட்டு விசைத்தறி தொழிலாளி தற்கொலை - சேலத்தில் பயங்கரம்!

 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே 10-ம் வகுப்பு மாணவனை அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொன்ற விசைத்தறி தொழிலாளி, பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகிலுள்ள கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்களின் மகனான தவுசிக் (15) என்பவர், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும், இடங்கணசாலை அருகே உள்ள சிட்டனூரைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான சிவராஜ் (24) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக நட்புடன் பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீட்டில் இருந்த தவுசிக்கை, சிவராஜ் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். அதன்பிறகு இருவரும் வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களில் தேடிவிட்டு மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

போலீசாரின் விசாரணையின் தொடர்ச்சியாக, கே.ஆர்.தோப்பூர் சாலையிலுள்ள மேட்டுக்காடு பகுதியில் மாணவன் தவுசிக் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான். இதற்கிடையில், தாரமங்கலம் அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் சிவராஜ் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருந்து வந்த நிலையில், மீண்டும் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றபோது ஏற்பட்ட ஆத்திரத்தில் சிவராஜ் மாணவனைக் கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இருவரும் செல்போனில் 'பிரிபயர்' போன்ற பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. குடிபோதையில் நடந்த கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.