சபாநாயகர் பதவிக்குத் தவெக வேட்பாளராக ஜே.சி.டி. பிரபாகர் மனுத்தாக்கல்.!

 

தமிழகச் சட்டமன்றத்தின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஜே.சி.டி. பிரபாகர் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றச் செயலாளர் அலுவலகத்தில், அவர் முறைப்படி மனுவை ஒப்படைத்தார். இந்த நிகழ்வின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உடனிருந்து அவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட ஜே.சி.டி. பிரபாகர், ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் என்பதால், அவரை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க அரசு தரப்பு ஆர்வம் காட்டி வருகிறது. வேட்புமனுத் தாக்கலின் போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் உற்சாகமாக முழக்கமிட்டது கோட்டை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாளை காலை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று பிற்பகல் வரை வேட்புமனுத் தாக்கல் செய்யக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி வரிசையில் உள்ள திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஒருவேளை எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால், நாளை அவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இருப்பினும், ஆளுங்கட்சிக்குத் தேவையான பலம் இருப்பதால் ஜே.சி.டி. பிரபாகர் வெற்றி பெறுவது ஏறத்தாழ உறுதி என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.