"பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. உரிய நேரத்தில் வெளிவருவார்!" - பழ. நெடுமாறன் பேட்டி!

 

தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்துப் பல முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்று முற்றத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வு குறித்துப் பழ. நெடுமாறன் அறிவிப்பு வெளியிட்டார்: இந்தியாவிலேயே மொழிக்காக நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகமான தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய். சுப்ரமணியம் நூற்றாண்டு விழா ஜூலை 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தச் சிறப்புமிக்க விழாவில் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பழ. நெடுமாறன், "விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் உயிரோடுதான் இருக்கிறார். இதனை நான் 2009-ம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து கூறி வருகிறேன். தற்சமயம் அவர் வெளியே வருவதற்கான சர்வதேசச் சூழ்நிலை சாதகமாக இல்லை; உரிய காலம் வரும்போது அவர் நிச்சயமாக மக்கள் முன் வெளிவருவார். ஏற்கனவே அவரது மகள் தொலைக்காட்சி முன்பாகத் தோன்றிப் பேசியுள்ளார்."

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் திரைப்படக் கேள்விகள் குறித்தும் அவர் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 'காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்துள்ள அரசின் நடவடிக்கையை வரவேற்பதாகத் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிச் செயல்பாடு குறித்து இப்போது மதிப்பிட முடியாது என்றும், ஓராண்டுக்குப் பிறகே கருத்து சொல்வது சரியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான கேள்விக்கு, தான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை என்பதால் அது குறித்துக் கருத்து எதுவும் கூற முடியாது எனப் புன்னகையுடன் தெரிவித்தார்.