வாராக்கடன் வெறும் 2% தான் - பிரதமரின் முத்ரா யோஜனா திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்!

 

பிரதமரின் முத்ரா யோஜனா' திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் ரூ.39.48 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.39.48 லட்சம் கோடி கடன் உதவி சிறு தொழில்முனைவோருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வங்கிச் சேவைத் திட்டங்களிலேயே மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் இத்திட்டம், பிணையாக வழங்க எந்தச் சொத்தும் இல்லாத சாதாரண மக்களையும் சென்றடைந்துள்ளது.

முத்ரா திட்டத்தின் கீழ் உள்ள மூன்று பிரிவுகளான சிசு, கிஷோர் மற்றும் தருண் ஆகியவற்றில் வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையில் முறையே 12.4 சதவீதம், 9.48 சதவீதம் மற்றும் 7.92 சதவீதம் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, தொழில் தொடங்க மிகச்சிறிய அளவிலான கடன்களைப் பெறும் 'சிசு' பிரிவில் வராக்கடன் விகிதம் வெறும் 1.83 சதவீதமாக மட்டுமே உள்ளது. ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தின் கீழ் வராக்கடன்கள் சுமார் 2 சதவீதமாகவே இருப்பதால், கடன்கள் பெருமளவில் குவிந்துவிட்டதாகக் கூற முடியாது.

இருப்பினும், நிலுவையில் உள்ள தொகையை வசூலிக்க வங்கிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்காகத் தொடர் கண்காணிப்பு, வாடிக்கையாளர்களுடனான நேரடித் தொடர்பை அதிகரித்தல், கடன் தவணைகளை மறுசீரமைத்தல் மற்றும் 'ஒருமுறை தீர்வு திட்டம்' போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.