பிரதோஷம், கார்த்திகை பௌர்ணமி... சதுரகிரி மலை ஏறி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில், பிரதோஷம் மற்றும் கார்த்திகை பௌர்ணமி வழிபாடுகளை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்ய வனத்துறையினரும் கோயில் நிர்வாகத்தினரும் அனுமதி அளித்துள்ளனர்.
வரும் நவம்பர் 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மொத்தம் நான்கு நாட்களுக்குப் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கோயில் வளாகத்தில் இரவு நேரங்களில் தங்குவதற்கு எவ்வித அனுமதியும் இல்லை. எனவே, மலைக்குச் செல்லும் பக்தர்கள் தங்களது தரிசனத்தை முடித்துக் கொண்டு அன்றைய தினமே அடிவாரத்திற்குத் திரும்பிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வடகிழக்குப் பருவமழைக் காலம் என்பதால், மலைப்பகுதிகளில் திடீரென மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வாறு மழை பெய்து மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்தால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி தரிசன அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
மலையேறும் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மலைப்பகுதிக்குக் கொண்டு செல்லக் கூடாது என்றும், வனத்துறையினரின் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.