கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா தோல்வி; மகளிர் பிரிவில் வைஷாலி முதலிடம்!
சைப்ரஸ் நாட்டின் பாபோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 10-வது சுற்று, இந்திய ரசிகர்களுக்குக் கலவையான முடிவுகளைத் தந்துள்ளளது. தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவிய நிலையில், அவரது சகோதரி வைஷாலி முதலிடத்தைத் தக்கவைத்து அசத்தி வருகிறார்.
ஓபன் பிரிவில் நடைபெற்ற 10-வது சுற்றில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் இளம் வீரர் ஜவோகிர் சிண்டாரோவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அதிரடியாகக் காய்களை நகர்த்திய சிண்டாரோ, பிரக்ஞானந்தாவின் தற்காப்பு அரண்களைத் தகர்த்து வெற்றி பெற்றார். இந்தத் தோல்வியின் மூலம், 10 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா 4 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளார். அதேசமயம், அபாரமாக ஆடி வரும் சிண்டாரோ 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கம்பீரமாக முன்னிலை வகிக்கிறார்.
வைஷாலி 'ராணி'யாக முதலிடம்:
மகளிர் பிரிவில் தமிழக ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. தமிழக வீராங்கனை வைஷாலி, 10 சுற்றுகள் முடிவில் 6 புள்ளிகளுடன் தனிப் பெரும் முதலிடத்தில் நீடிக்கிறார். உலக சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் அவர் மிக வலுவான நிலையில் இருப்பது இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதே பிரிவில் விளையாடி வரும் மற்றொரு இந்திய நட்சத்திரமான திவ்யா தேஷ்முக், 10-வது சுற்றில் தோல்வியைச் சந்தித்தார். இது அவருக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தொடரின் இறுதிப் பகுதி நெருங்கி வரும் வேளையில், ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா மீண்டெழுந்து வெற்றிப்பாதைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மகளிர் பிரிவில் வைஷாலி இதே வேகத்தைத் தொடர்ந்தால், அவர் வரலாற்றுச் சாதனையைப் படைப்பது உறுதி.