குரோஷியா கிராண்ட் செஸ் ரேபிட் பிரிவில் பிரக்ஞானந்தா அபாரம்.. சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு பிரகாசம்!
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெற்று வரும் 2026 'சூப்பர் ரேபிட் & பிளிட்ஸ்' கிராண்ட் செஸ் டூர் போட்டிகளில், இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்பொழுது நடைபெற்று வரும் இந்தத் தொடரின் ரேபிட் பிரிவு சுற்றுகளின் முடிவில், பிரக்ஞானந்தா 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி செஸ் வீரரான வெஸ்லி சோ 12 புள்ளிகளுடன் தற்பொழுது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். அவரைத் தொடர்ந்து பிரக்ஞானந்தா மிகக் குறைந்த புள்ளி வித்தியாசத்தில் 2-வது இடத்தில் உள்ளார்.
இந்தத் தொடரின் அடுத்தகட்டமாகப் பிளிட்ஸ் சுற்றுகள் தொடங்கவுள்ளன. இதில் பிரக்ஞானந்தா தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கும் பட்சத்தில், இந்தத் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு அவருக்குப் பிரகாசமாக உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர் டி. குகேஷும் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.