பெங்களூரு சிறையில் செல்போன் பயன்படுத்திய பிரஜ்வல் ரேவண்ணா... பெரும் பரபரப்பு!
பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு சிறையில் செல்போன் பயன்படுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மத்திய மந்திரி குமாரசாமியின் மருமகனுமான இவர், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அடைக்கப்பட்டு இருக்கும் பெங்களூரு சிறையில் குற்றப்பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியபோது செல்போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறைக்குள் அவருக்கு செல்போன் எப்படி கிடைத்தது என்பது குறித்து குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு வழக்கும் பதிவு செய்துள்ளனர். பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள கைதி சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதா என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பெங்களூரு மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் விஐபி சலுகைகள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்தச் சம்பவம் தற்போது மீண்டும் அந்த சர்ச்சைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷன் சிறைக்குள் விருந்தில் ஈடுபட்டதாகவும் சர்ச்சை ஏற்பட்டது.