"உங்கள் மகன் எங்களிடம் பிடிபட வேண்டுமென வேண்டிக்கொள்ளுங்கள்!" - அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் தூதரகம் பதில்!
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலின் போது, இரண்டு F-15 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு விமானி ஈரானிய எல்லைக்குள் சிக்கியுள்ளார். காணாமல் போன அந்த விமானியின் தாயார் சமூக வலைதளத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவிற்கு, ஈரான் தூதரகங்கள் அளித்துள்ள பதில்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
காணாமல் போன அமெரிக்க விமானியின் தாயார் தனது 'எக்ஸ்'பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், "ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டு எப்-15 போர் விமானங்களை இயக்கிய என் மகன் உட்பட அனைத்து விமானிகளுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். ராணுவத்திடம் இருந்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை, என் இதயம் கவலையால் கனத்துப்போயுள்ளது" என அவர் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவிற்குப் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகங்கள் அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளன. பாகிஸ்தான் ஈரான் தூதரகம் தனது பதிலில் "அமெரிக்க மீட்புக் குழுக்களால் உங்கள் மகன் கண்டுபிடிக்கப்படுவதை விட, ஈரானிய ராணுவத்தால் அவர் பிடிக்கப்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். டிரம்ப்புடன் இருப்பதை விட, ஈரானியக் காவலில் உங்கள் மகன் பாதுகாப்பாக இருப்பார். போர் கைதிகளைக் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் எப்படி நடத்துவது என்று நாகரிகமான ஈரானியர்களாகிய எங்களுக்குத் தெரியும்."
தென்னாப்பிரிக்க ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள பதிலில், "மனிதாபிமானச் சட்டங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பே, ஈரானில் போர் கைதிகளுக்கான உரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. உங்கள் கூட்டாளிகளான சியோனிஸ்டுகளைப் (இஸ்ரேல்) போல நாங்கள் காட்டுமிராண்டிகள் அல்ல. நாங்கள் அமெரிக்காவைப் போலக் கற்காலத்தில் வாழ்பவர்களும் இல்லை; எங்களிடம் உயரிய நாகரிகம் உள்ளது."
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே நேற்று இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஈரானுக்குள் இருக்கும் அமெரிக்க விமானியை உயிருடன் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூதரகங்களின் இந்தப் பதில் போர்க்களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.