தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை பலியான சோகம்... கர்ப்பிணி தாயும் தற்கொலை! 

 

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள டி.ஆண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமலை என்பவரின் 28 வயது மனைவி கலைச்செல்வி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்குக் கிரிஸ்மிதா என்ற 2 வயது பெண் குழந்தை இருந்த நிலையில், கலைச்செல்வி மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக  உயிரிழந்தது.

தன் கண் முன்னே ஆசையாக வளர்த்த குழந்தை இறந்த துக்கத்தைத் தாங்க முடியாமல், கலைச்செல்வி கடந்த சில நாட்களாகவே யாருடனும் பேசாமல் கடுமையான மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறைக்குள் சென்ற அவர், கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீடு திரும்பிய குடும்பத்தினர், கலைச்செல்வி தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த கோட்டப்பட்டி போலீசார், கலைச்செல்வியின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபரீத தற்கொலைச் சம்பவம் குறித்துப் போலிசார் முறைப்படி வழக்குப்பதிவு செய்து தங்களது தீவிர விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.