நிறைமாத கர்ப்பிணி... நாதக பெண் வேட்பாளர் மீது திமுகவினர் கொடூர தாக்குதல்.. மருத்துவமனையில் அனுமதி!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் இன்று வாக்குப்பதிவின் போது, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனிஷ் பாத்திமா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபநாசம் தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றைப் பார்வையிட அனிஷ் பாத்திமா சென்றபோது, அங்கு இருந்த திமுகவினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் தாக்கப்பட்டதாக அவரது கணவர் நூ.சே.அம்ஜத் குற்றம் சாட்டியுள்ளார். அனிஷ் பாத்திமா தற்போது நிறைமாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலில் காயமடைந்த அனிஷ் பாத்திமா, உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்ப்பிணி என்றும் பாராமல் ஒரு பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் அங்குத் திரண்டதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் ஆணையத்திடம் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மோதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இன்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், பாபநாசத்தில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.