"அனைத்து கோயில்களிலும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வழியில் தரிசனம்" - அமைச்சர் ரமேஷ் உத்தரவு!
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களிலும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், சிறப்பு வழியில் விரைவாகச் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் முக்கியக் கோயில் ஒன்றிற்குச் சென்ற கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்காகப் பொது வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அவதிப்பட்டதாகக் கூறி, பக்தர் ஒருவர் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் ஆதங்கத்துடன் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவி மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அதனைத் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது கவனத்தில் எடுத்துக்கொண்டு உடனடியாக உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
@RameshOffcl kandipaga idhelam maranum , padi padiya action eduthu oru mudivumu kontu vangaa🙏🏻 pic.twitter.com/fOciZG2Bmt
— Arun (@arunXverse) June 15, 2026
பாதிக்கப்பட்ட பக்தரின் வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "அன்புடன் வணக்கம். இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் அனைத்திலும் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரைப் பொது வரிசையில் நிற்க விடாமல், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு வழியில் மிக விரைவாகத் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அனைத்துத் திருக்கோயில் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளேன். இந்த உத்தரவை மீறி, இவர்களைப் பொது வரிசையில் காத்திருக்க வைக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது."
கோயில்களில் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நீதிமன்றங்கள் ஏற்கனவே பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.