"வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல்" - விஜய்யின் நடவடிக்கையை வறுத்தெடுத்த பிரேமலதா!

 

தமிழக அரசின் புதிய நியமனம் ஒன்றிற்குத் தேமுதிக கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட நாராயணா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதற்குத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசின் இந்த புதிய நியமனம் குறித்துப் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில், அம்மாநிலப் பின்னணியைக் கொண்ட வெங்கட நாராயணாவைத் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது, தமிழக மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது."

தமிழகத்தில் தகுதியான நபர்கள் பலர் இருக்கும்போது, வெளிமாநிலப் பின்னணி கொண்டவரைத் தேர்வு செய்தது ஏன் என்று பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி அளவில் தமிழகத்தின் உரிமைகளுக்காகப் பேசவும், மத்திய அரசுடன் இணக்கமான உறவை ஏற்படுத்தவும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான, திறமையான நபர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைப் புறக்கணித்து விட்டு இந்த நியமனம் ஏன் செய்யப்பட்டுள்ளது?

தமிழக விவசாயிகளின் நலன்களையும், ஒட்டுமொத்த மாநில உரிமைகளையும் கருத்தில் கொண்டு, இந்த சர்ச்சைக்குரிய நியமனத்தைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.