இன்று ராஜ்யசபா வேட்பாளரை அறிவிக்கிறார் பிரேமலதா... விஜயகாந்த் மறைவுக்குப் பிறகான முதல் சட்டமன்றத் தேர்தல்!
தமிழக அரசியல் களத்தில் முக்கியத் திருப்பமாக, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்' தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
இது குறித்து பேசிய சுதீஷ், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள ராஜ்யசபா (மாநிலங்களவை) தேர்தலில் தேமுதிகவிற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச் 4) அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். வரவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் இடங்கள் குறித்து அடுத்த ஒரு வாரத்திற்குள் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும்.
இந்த முக்கியமான சந்திப்பில் திமுக தரப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., திருச்சி சிவா, டி.ஆர். பாலு, ஆர்.எஸ். பாரதி மற்றும் அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் பங்கேற்றனர். தேமுதிக தரப்பில் பொருளாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேமுதிக பொருளாளர் சுதீஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதற்கட்டமாக ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றத் தொகுதிகள் குறித்து இன்னும் ஒரு வாரத்திற்குள் தெளிவான முடிவு எடுக்கப்படும். வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் மனுத்தாக்கல் நடைபெறும்" என்று தெரிவித்தார்.
விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு தேமுதிக சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், திமுகவுடனான இந்தக் கூட்டணி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் தேமுதிகவிற்கு இருக்கும் வாக்கு வங்கி திமுகவிற்குப் பலம் சேர்க்கும் எனக் கருதப்படுகிறது.