வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு.. இன்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை!
தமிழகத்தில் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது மற்றும் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் மாநிலத்தில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள் மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுத்து, பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் மாநில அரசு சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பகல் 12 மணியளவில் நடைபெறும் இந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்திற்குத் தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் நேரில் கலந்து கொள்கின்றனர். மேலும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, சுகாதாரத்துறை, மின்துறை மற்றும் போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அவசரகாலச் செயல்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
நீர்நிலைகளைத் தூர்வாருதல், நீர்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைச் செடிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றுதல், பருவமழை காலங்களில் சேதமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படும் மின்கம்பங்கள் மற்றும் மின்கோபுரங்களை முன்கூட்டியே சீரமைத்தல் போன்ற பணிகள் குறித்து அறிவுறுத்தப்படவுள்ளது.
பேரிடர் காலங்களில் துரிதமாகச் செயல்படத் தேவையான மீட்பு உபகரணங்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களைத் தயார் நிலையில் வைத்தல், பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ள பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து அங்கு மீட்புக் குழுவினரைப் பணி அமர்த்துதல், நிவாரண மையங்களில் மின்சாரம், குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக உறுதி செய்தல் போன்ற பல்வேறு முக்கிய உத்தரவுகளை முதல்-அமைச்சர் விஜய் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாகப் பிறப்பிக்க உள்ளார்.