விஜய் பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான ஆயத்தப் பணிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், ஆட்சி அமைக்க இன்னும் ஆளுநர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை என்பதால், அந்த ஏற்பாடுகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தவெக தரப்பில் பெரும்பான்மை பலம் உள்ளதாகக் கூறப்பட்டாலும், ஆளுநரின் மௌனம் மற்றும் தற்போதைய அரசியல் சிக்கல்கள் காரணமாக இந்தத் திடீர் முடக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு பக்கம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அளித்துள்ள அதிரடிப் புகார் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜ் பெயரில், தவெக தரப்பினர் போலியாக ஆதரவுக் கடிதம் தயாரித்து ஆளுநர் மாளிகையில் சமர்ப்பித்ததாக அவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாகத் தவெக செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்தப் புகார் விஜய்யின் பதவியேற்புப் படலத்தில் மிகப் பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கப் போவதாக அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அடுத்தடுத்து அரங்கேறும் இந்த அதிரடி மாற்றங்கள் தவெக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஒருபுறம் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இருந்தாலும், மறுபுறம் கிளப்பப்பட்டுள்ள போலி கடிதப் புகாரால் ஆளுநர் தனது முடிவைத் தள்ளி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், நேரு அரங்கில் போடப்பட்டிருந்த மேடைகள் மற்றும் அலங்காரப் பணிகள் அப்படியே பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.