சின்ன வெங்காயம் விலை கடும் சரிவு... கிலோ ரூ.3க்கு விற்பனையாவதால் கதறும் விவசாயிகள்!
தமிழகத்தின் சமையலில் முக்கிய இடம்பிடிக்கும் சின்ன வெங்காயத்தின் விலை தரைமட்டத்திற்குச் சரிந்துள்ளது. கடந்த சீசனில் ஓரளவு லாபம் பார்த்த விவசாயிகள், இந்த முறை கிலோ 3 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
சின்ன வெங்காயம் என்பது மூன்று மாத காலப் பயிராகும். வெயில், மழை என இயற்கை இடர்பாடுகளைத் தாண்டி விவசாயிகள் இதனைப் பயிரிடுகின்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் அறுவடை தொடங்கியுள்ளதாலும், வெளிமாநில வரத்து அதிகரித்துள்ளதாலும் சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாகச் சரிந்துள்ளது.
கடந்த சீசனில் கிலோ ரூ.13 வரை விற்பனையான வெங்காயம், தற்போது வியாபாரிகளிடம் கிலோ ரூ.3 என்ற மிகக் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்யப்படுகிறது. விலை குறைவாக இருப்பதால், வெங்காயத்தைச் சந்தைக்குக் கொண்டு செல்லாமல் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களிலேயே 'பட்டறை' அமைத்துச் சேமித்து வருகின்றனர்.
பட்டறையில் சேமித்து வைக்கப்படும் வெங்காயங்கள் அதிகபட்சம் 3 மாதங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். அதற்குள் விலை உயராவிட்டால், வெங்காயங்கள் அழுகி ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிவிடும் என விவசாயிகள் அச்சப்படுகின்றனர். ஒரு ஏக்கருக்கு விதை, உரம், மருந்து மற்றும் கூலி என ஆயிரக்கணக்கில் செலவு செய்துள்ள நிலையில், தற்போது கிடைக்கும் விலை அறுவடை கூலிக்குக் கூட ஈடாகாது எனத் தெரிவிக்கின்றனர்.
சின்ன வெங்காயத்திற்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், அழுகும் நிலையில் உள்ள வெங்காயத்தைப் பாதுகாக்க அரசு குளிரூட்டப்பட்ட கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், அடுத்தடுத்த சீசன்களில் சின்ன வெங்காயம் பயிரிடுவதை விவசாயிகள் கைவிடும் நிலை ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.