தமிழகத்திற்குப் பெருமை... முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!

 

இந்திய ராணுவத்தின் மிக உயரிய பதவியான முப்படைகளின் தலைமை தளபதியாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை மத்திய அரசு அதிரடியாக நியமித்துள்ளது. தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அனுபவம் வாய்ந்த ராஜா சுப்ரமணி இந்தப் பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒரு தமிழர் இந்தியாவின் பாதுகாப்புப் படையை வழிநடத்தப் போவது தமிழக மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வியிலும் ராணுவப் பயிற்சியிலும் சிறந்து விளங்கிய இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார்.

இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு நிலைகளில் பணியாற்றி, எல்லையோரப் பாதுகாப்பு மற்றும் ராணுவ உத்திகளை வகுப்பதில் தசாப்த கால அனுபவம் கொண்டவர். தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றியதுடன், ராணுவத் தலைமைத் துணைத் தளபதி போன்ற மிக முக்கியமான பொறுப்புகளையும் இவர் மிகச் சிறப்பாக வகித்துள்ளார்.

நவீனப் போர் முறைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்புச் சவால்களைக் கையாள்வதில் வல்லவரான ராஜா சுப்ரமணி, முப்படைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது நியமனம் இந்திய ராணுவத்தின் வலிமையை மேலும் அதிகரிக்கும் என ராணுவ உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். முப்படைகளின் தலைமை தளபதி என்ற முறையில், தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்றையும் நவீனப்படுத்துவது மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை அமைப்புகளை உருவாக்குவது இவரது முதன்மைப் பணியாக இருக்கும்.