பக்தர் காணிக்கையாக வழங்கிய பஞ்சலோக டாலரை அபேஸ் செய்த பூசாரி - நெல்லையில் அதிர்ச்சி!
நெல்லை பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயிலில் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய பஞ்சலோக டாலரை, அங்குள்ள பூசாரி முறைகேடாகத் திருடித் தானே அணிந்து கொண்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் ஸ்ரீ பூர்ணா சிற்பக்கலை கூடத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருவுருவம் பொறித்த பஞ்சலோக டாலர் மாலையைக் கோயிலில் பணிபுரியும் பூசாரி ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
பக்தர் தாமோதரன் இதுகுறித்து கோயில் நிர்வாகத்திற்கு நேரடியாகத் தகவல் தெரிவிக்காததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த பூசாரி, பஞ்சலோக டாலரைக் கோயில் கணக்கில் சேர்க்காமல் முறைகேடாகத் திருடித் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற்ற ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தாமோதரன் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது தான் காணிக்கையாகக் கொடுத்த பஞ்சலோக டாலரை அந்த பூசாரி தனது கழுத்தில் அணிந்திருப்பத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாகக் கோயில் நிர்வாகத்திடம் அவர் முறையிட்ட போது, நிர்வாகத் தரப்பில் இருந்து சரியான பதில் அளிக்கப்படாததால் அவர் மனவேதனைடைந்துள்ளார்.