இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி புதிய சாதனை - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

 

இத்தாலி வரலாற்றில் நீண்ட காலம் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற புதிய பெருமையைப் பெற்றுள்ள ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இத்தாலி பிரதமராக கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் 22 ம் தேதி பதவியேற்ற ஜார்ஜியா மெலோனி (49), தொடர்ந்து 1,414 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். இதன் மூலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நீண்ட காலம் தொடர்ச்சியாக இத்தாலி பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையையும், இத்தாலியின் முதல் பெண் பிரதமர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

இச்சாதனை குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மெலோனியின் இந்த மைல்கல் அவரது தலைமையின் மீது இத்தாலி மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா - இத்தாலி இடையேயான சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் மெலோனியின் நட்பு முக்கியப் பங்காற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ள மோடி, வரும் ஆண்டுகளிலும் அவர் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.