நாட்டின்  முதல் 'ஹைட்ரஜன் ரயில்' சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

 

இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் அதிநவீன பசுமை ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹரியானா மாநிலம் ஜிந்த் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார். 'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய டீசல் ரயில்களுக்கு மாற்றாக, முற்றிலும் தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தும் வகையில் இந்த ஹைட்ரஜன் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன், சேமித்து வைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜனை இணைத்து 'ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன்கள்' மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து இயங்குகிறது.

இந்த மின் உற்பத்தி செயல்முறையின் போது கார்பன் உமிழ்வு எதுவும் இருக்காது. ரயிலில் இருந்து வெறும் நீராவி மட்டுமே வெளியேறும் என்பதால், இது சுற்றுச்சூழலுக்கு 100% பாதிப்பில்லாதது. உலக அளவில் ஜெர்மனி, சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே ஹைட்ரஜன் ரயில்களை இயக்கி வரும் வேளையில், இந்தியா இதில் ஒரு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.

உலக நாடுகளில் பொதுவாக 2 அல்லது 3 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரயில்களே இயக்கப்படுகின்றன. ஆனால், இந்திய ரயில்வே முதன்முறையாக 10 பெட்டிகள் (2 பவர் கார்கள் + 8 பயணிகள் பெட்டிகள்) கொண்ட உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயிலை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளது.

இந்த 10 பெட்டிகள் கொண்ட ரயிலில் ஒரே நேரத்தில் சுமார் 2,600 பயணிகள் வரை பயணிக்க முடியும். இந்த அதிநவீன ரயில் மணிக்கு 75 கி.மீ என்ற அதிகபட்ச செயல்பாட்டு வேகத்தில் இயக்கப்பட உள்ளது. மேலும், இது மணிக்கு 110 கி.மீ வேகம் வரை செல்லும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவின் அரசியல் மையமான ஜிந்த் நகரிலிருந்து சோனிபட் இடையே உள்ள 89 கிலோமீட்டர் தூர வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது. இதன் மூலம் கோஹானா, பாண்டு பிந்தாரா உள்ளிட்ட இடைப்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் பெரிதும் பயனடைவர். இந்த ரயிலுக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய, இந்திய ரயில்வே அமைப்பிலேயே நாட்டின் மிகப்பெரிய ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையமும் ஜிந்த் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை உறுதி செய்ய ஹைட்ரஜன் கசிவு, வெப்பம் மற்றும் புகை ஆகியவற்றை முன்கூட்டியே கண்டறியும் பல அடுக்கு அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளும்  இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ளன. இந்திய ரயில்வேயைக் கார்பன் இல்லாத தூய்மையான போக்குவரத்தாக மாற்றும் இலக்கிற்கு இத்திட்டம் ஒரு முக்கிய அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.