3 நாட்கள் பயணமாக இன்று செசல்ஸ் புறப்படுகிறார் பிரதமர் மோடி!

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியப் பெருங்கடல் நாடான செசல்ஸுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 11 ஆண்டுகள் கழித்துப் பிரதமர் மோடி செசல்ஸ் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.

செசல்ஸ் நாட்டின் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினியின் அதிகாரப்பூர்வ அழைப்பை ஏற்றுப் பிரதமர் இப் பயணத்தை மேற்கொள்கிறார். செசல்ஸ் நாட்டின் தேசிய தின பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காகப் பிரதமருக்குச் 'சிறப்பு கௌரவ விருந்தினர்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்விழாக் கொண்டாட்ட அணிவகுப்பில் இந்திய ஆயுதப் படைகளின் ஒரு பிரிவினரும், இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு அதிநவீனப் போர்க்கப்பல்களும் நேரடியாகப் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளன. இப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான உத்திசார் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு முக்கிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி தனது பயணத்தின் போது அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் இருதரப்பு ஒத்துழைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றம், பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விரிவான கூட்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், செசல்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ள அவர், அங்கு வாழும் இந்திய வம்சாவளி மக்களுடனும்  கலந்துரையாட உள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு முக்கியப் பாதுகாப்புப் பங்காளியாக விளங்கும் செசல்ஸ் நாடு, இந்தியாவின் 'மகாசாகர்'  என்ற கடல்சார் தொலைநோக்குத் திட்டத்திலும், 'குளோபல் சவுத்' நாடுகளுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பிலும் மிக முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. பிரதமரின் இந்த முக்கியப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால நட்புறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.