"பொருளாதாரத்தைத் தாக்கியும் போர் நடத்தலாம்" - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
ஆயுதங்களை ஏந்தி நடத்தப்படும் போர்களை விட, ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தாக்கி முடக்குவதன் மூலமும் அந்த நாட்டைப் பலவீனப்படுத்த முடியும் எனப் பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரூ.169 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அதிநவீன தரவு மையம் மற்றும் இணையப் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நவீன காலத்தில் போர்கள் என்பது எல்லைகளில் ஆயுதங்களால் மட்டும் நடத்தப்படுவதில்லை; மாறாக, ஒரு நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை இலக்காகக் கொண்டும் போர்கள் நடத்தப்படலாம்.
இந்தியா மிக வேகமாகப் பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் இக்காலக்கட்டத்தில், நாட்டின் வங்கித் துறை மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். இணையக் குற்றவாளிகள் மற்றும் இணையப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்திய நிதித் துறையைப் பாதுகாப்பதில் இந்தப் புதிய மையம் முக்கியப் பங்காற்றும் எனத் தெரிவித்தார்.