பிரதமர் மோடி - ஈரான் அதிபருடன் தொலைபேசி உரையாடல்... அமைதியை வலியுறுத்தி ரமலான் வாழ்த்து தெரிவித்தார்!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் மறைவு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது போன்ற இக்கட்டான சூழலில் இந்திய பிரதமர் மோடி, ஈரான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடினார். ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அமைதியை வலியுறுத்தி பேசினார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுக்கு ரம்ஜான் மற்றும் ஈரானிய புத்தாண்டான நவ்ரூஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தப் பண்டிகைக் காலம் மேற்காசியப் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், உலகளாவிய விநியோகச் சங்கிலியை சீர்குலைக்கும் வகையிலும் அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பிரதமர் மோடி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் உலக நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தை மூடியுள்ளதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், சர்வதேச வர்த்தகப் பாதைகள் எப்போதும் திறந்தும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதையும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஈரானில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு ஈரான் அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்குப் பிரதமர் மோடி தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் இந்தியா போன்ற இறக்குமதியை நம்பியுள்ள நாடுகளில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. காமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானில் ஏற்பட்டுள்ள தலைமை மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியா தனது நடுநிலையான மற்றும் அமைதியை விரும்பும் நிலைப்பாட்டை இந்த உரையாடல் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.