விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் - பிரதமர் நரேந்திர மோடி தீவிர ஆலோசனை!
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், குஜராத், கோவா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல்கள் வரவுள்ள நிலையில், மத்திய அமைச்சரவையில் மிக விரைவில் பெரிய அளவில் மாற்றங்களும் விரிவாக்கமும் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேச தேர்தல் வரவுள்ள சூழலில், அங்குப் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த கேபினட் அமைச்சர்கள் இல்லாதது, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டிய அவசியம் போன்றவை எழுந்துள்ளன.
மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் குரியன் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோரின் ராஜ்யசபா பதவிக் காலம் முடிவடைந்துள்ள நிலையில், ஹர்தீப் சிங் புரி, பி.எல்.வர்மா போன்ற முக்கிய அமைச்சர்களின் பதவிக் காலமும் நிறைவடைய உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகள் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சர் பொறுப்புகளை வழங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
20-க்கும் மேற்பட்ட அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்படலாம் எனவும், சில அமைச்சர்களின் பொறுப்புகள் குறைக்கப்பட்டு, சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. சில மத்திய அமைச்சர்கள் அரசில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் கட்சி அமைப்பில் முக்கியப் பணிகளுக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.
நீட் விவகாரத்தைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதானுக்கு, பாராளுமன்றத்தில் அமைச்சர்களுக்கான அறை ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு வேறு ஒரு முக்கிய இலாகா ஒதுக்கப்பட்டு மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.