undefined

இன்று மதுரை வரும் பிரதமர் மோடி.. ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைப்பு... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

 

தமிழகத்தில் இன்று பல்வேறு அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். தஞ்சாவூர் வழியாக அவர் மதுரை செல்ல உள்ளார். சென்னைக்கு நேற்று இரவு வந்த பிரதமர் மோடி, இன்று காலை புதுச்சேரியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, மதியம் தஞ்சாவூர் வழியாக மதுரைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் மோடி புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, இன்று பிற்பகல் 1.55 மணிக்கு தஞ்சாவூர் விமானப்படைத் தளத்திற்கு வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்குச் செல்கிறார்.

தஞ்சை விமானப்படைத் தளத்தைச் சுற்றிலும், புதுக்கோட்டை சாலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளிலும் சுமார் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமரின் வருகையையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, பாஜகவின் உள்ளூர் முக்கிய நிர்வாகிகள் 10 பேர் மட்டுமே விமானப்படைத் தளத்திற்குள் சென்று பிரதமரை வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரிலிருந்து மதுரை செல்லும் பிரதமர், அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) சார்பில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மதுரை மண்டேலா நகர் பகுதியில் இதற்கான பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இந்த இரண்டாம் கட்டப் பிரசாரக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று பிரதமர் வழிபாடு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்றைய பயணத்தின் போது புதுச்சேரியில் ரூ. 2,700 கோடி மதிப்பிலான திட்டங்களையும், மதுரையில் ரூ. 4,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதில் எட்டிற்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளும் அடங்கும்.

தமிழக அரசியலில் இந்தப் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒட்டுமொத்த தென் மாவட்டங்களிலும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.