பிரதமர் மோடியின் ஆளுயர தங்க சிலை.. ரூ.112 கோடியில் மோடிக்கு பிரம்மாண்டக் கோயில் - திருநங்கைகள் நலவாரியம் தீர்மானம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பீகார் தலைநகர் பாட்னாவில் ரூ.112 கோடி செலவில் பிரம்மாண்டக் கோயில் கட்டப் பீகார் மாநில திருநங்கைகள் நல வாரியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பாட்னா நகரின் முக்கியப் பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இந்த பிரம்மாண்டக் கோயில் வளாகத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாகப் பிரதமர் ஒருவருக்குக் கோயில் கட்டப்படும் நிலையில், இந்தக் கோயிலில் பிரதமர் மோடியின் உயரத்திற்கு முழு உருவத் தங்கச் சிலை நிறுவப்படவுள்ளது. 2019-ஆம் ஆண்டு மத்திய மோடி அரசு இயற்றிய 'திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்' தங்களின் தலைவிதியை மாற்றியதாகத் திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் ராஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இச்சட்டம் காரணமாகப் பீகாரில் திருநங்கைகள் காவல்துறை ஆய்வாளர்களாகவும், மருத்துவர்களாகவும், அரசு நல வாரிய உறுப்பினர்களாகவும் பதவி வகிக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 29 அன்று நடைபெற்ற நல வாரியக் கூட்டத்தில் ராஜன் சிங் முன்மொழிந்த இக்கோயில் கட்டும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, பீகார் மாநில அரசின் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிலம் ஒதுக்கப்பட்டதும் கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்குக் கோயில் கட்டும் இந்த அறிவிப்பு இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. திருநங்கைகள் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த தலைவருக்குக் காட்டும் அன்பாக ஒரு தரப்பினர் இதைக் கருதும் வேளையில், ரூ.112 கோடி நிதியை நேரடியாகத் திருநங்கைகளின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவ வசதிகளுக்குப் பயன்படுத்தலாம் என மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.