undefined

பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு... மார்ச் 4ல் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்பு!

 

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம், பல ஆண்டுகாலக் காதலுக்குப் பிறகு நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திரையில் ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த இணை, நிஜ வாழ்விலும் இணைந்துள்ளனர். இவர்களது திருமணச் சடங்குகள் இரு குடும்பங்களின் பாரம்பரியத்தையும் மதிக்கும் வகையில் அமைந்திருந்தன.

நேற்று காலை 10:10 மணியளவில் உதய்பூர் அரண்மனைக்கு அருகிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. முதலில் தெலுங்கு பாரம்பரிய முறைப்படியும், பின்னர் ராஷ்மிகாவின் குடும்ப வழக்கமான 'கொடவா' முறைப்படியும் சடங்குகள் நடைபெற்றன. திருமணத்திற்குப் பிறகு விஜய்யின் தாயார் மாதவி, தனது மருமகள் ராஷ்மிகாவுக்குத் தங்களது குடும்பப் பரம்பரை வளையல்களைப் பரிசாக வழங்கி வரவேற்றுள்ளார்.

திருமணத்திற்கு முன்னதாகவே டெல்லி சென்ற இந்த ஜோடி, பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துத் தங்களது திருமண வரவேற்புக்கான அழைப்பிதழை வழங்கினர். பிரதமருடன் உரையாடிய கையோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் மார்ச் 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகையர் மட்டுமின்றி, முக்கிய அரசியல் தலைவர்களும் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி சென்று நேரில் அழைப்பு விடுத்துள்ளதால், மார்ச் 4 அன்று நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா கலந்துகொள்வார்களா என்ற பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.