undefined

பிரதமர் மோடி வருகை.. திருப்பரங்குன்றத்தில் கடைகள் அடைப்பு... 11 மணிவரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி!

 

இன்று மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, உலகப்புகழ் பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கான வழிபாட்டு நேரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை வரும் பிரதமர் மோடி, இன்று மாலை அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காகப் பிற்பகல் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு நேரம்: வழக்கமாக  மதியம் 1 மணி வரை நடை திறந்திருக்கும் என்றாலும், பிரதமரின் வருகையையொட்டி இன்று காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 11 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சன்னதி தெரு மற்றும் பெரிய ரத வீதிகளில் உள்ள பூ, பழக் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் நண்பகல் 12 மணிக்குள் அடைக்கப்பட வேண்டும் எனப் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. ரத வீதிகள் மற்றும் சன்னதி தெரு ஆகிய பகுதிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டுச் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

மாலை 4:00 மணியளவில் மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாகப் பெருங்குடி, அவனியாபுரம் வழியாகப் பிரதமர் கோவிலுக்கு வந்தடைகிறார். கோவில் வாசலில் அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, மேளதாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

மூலவர் சுப்பிரமணிய சுவாமியைத் தரிசனம் செய்த பிறகு, கம்பத்தடி மண்டபத்தில் வைத்துப் பிரதமருக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளன. மாலை 4:20 மணியளவில் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு, சாலை மார்க்கமாகப் பொதுக்கூட்டம் நடைபெறும் மண்டேலா நகர் பகுதிக்குப் பிரதமர் புறப்படுகிறார்.

பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படை மற்றும் தமிழகப் போலீசார் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவில் முழுவதும் போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. போலீசாரின் கடும் கெடுபிடிகள் காரணமாக இன்று காலை முதலே கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விடக் குறைவாகவே காணப்பட்டது.