“அந்தரங்க வீடியோ விவகாரம்...” - நடிகை சுரேகா வாணி வேதனை!
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து, அனுமதியின்றி தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பரப்பி வருவதாகப் பிரபல நடிகை சுரேகா வாணி கடும் வேதனை தெரிவித்துள்ளார். இத்தகைய சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணி குணச்சித்திர நடிகையாக வலம் வரும் சுரேகா வாணி, சமூக வலைதளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். இந்நிலையில், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை மர்ம நபர்கள் சில நாட்களுக்கு முன்பு ஹேக் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அனுமதி எதுவுமின்றித் தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அந்தரங்க வீடியோக்களைத் தவறான நோக்கத்தில் இணையதளங்களில் பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது தனியுரிமையில் தலையிட்டு, மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட ஹேக்கர்கள் மற்றும் அந்த வீடியோக்களைப் பகிர்பவர்கள் மீது சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் அளித்துச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர் எச்சரித்துள்ளார்.
சமீபகாலமாகத் திரையுலகில் நடிகைகள் சுனைனா, ஹன்சிகா மோத்வானி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளின் உருவத்தைப் போலி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சிதைத்து, போலி வீடியோக்களை வெளியிட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.
அந்தச் வரிசையில் தற்போது நடிகை சுரேகா வாணியின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டுத் தனிப்பட்ட வீடியோக்கள் பரப்பப்பட்டு வரும் சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.