மதுரை அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதி கோர விபத்து; 10 பேர் படுகாயம்!

 

மதுரை மாவட்டம் விராலிபட்டி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பலமாக மோதிய விபத்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தத் தனியார் பேருந்தில் விபத்து நடந்த போது சுமார் 30 பயணிகள் பயணம் செய்துள்ளனர். விராலிபட்டி பகுதியை அடைந்த போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் பேருந்து அதிவேகமாக மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் (Center Median) பயங்கரமாக ஏறி நின்றது.

விபத்து குறித்துத் தகவலறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள், பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த காயமடைந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் உட்பட 10 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.