சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்!

 

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அறிவித்த 'வெற்றி பயணம்' திட்டத்தின் கீழ் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் விரிவுபடுத்தப்பட்டதை அடுத்து, சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகர, எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், புறநகர் (மஃப்சல்) மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என அரசு அறிவித்தது. இந்தத் திட்ட விரிவாக்கத்தால் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து, தங்களது தினசரி வாழ்வாதாரமும் வருமானமும் கடுமையாகப் பாதிக்கப்படும் எனத் தனியார் பேருந்து ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் இன்று இயக்கப்படவில்லை.

திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகச் சேலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் மற்றும் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பேருந்து ஊழியர்களின் இந்தப் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு, நிலைமையைச் சீர்செய்யப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.