கேரளாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் - தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு!

 

கேரளாவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, ஜூன் 15-ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டத்தை அமல்படுத்தத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அரசின் இந்த அதிரடி முடிவுக்குத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பலத்த கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த கேரள சட்டமன்றத் தேர்தலில், "காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும்" எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் அண்மையில் பொறுப்பேற்றார்.

இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பெண்களுக்கு இலவசப் பயணத்தை வழங்குவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டம் வரும் ஜூன் மாதம் 15-ந் தேதிக்குப் பிறகு மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவிருக்கிறது என்றும், இதர வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் வி.டி.சதீசன் அறிவித்துள்ளார்.

அரசின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, கேரள மாநில தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் இதற்குத் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள், "கேரளாவில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம், தனியார் பேருந்து தொழில் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டீசல் விலை உயர்வு, பேருந்து உதிரிப் பாகங்களின் விலை அதிகரிப்பு மற்றும் கடுமையான நஷ்டம் போன்றவற்றால் இந்தத் தொழிலை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம். இதுதவிர, கேரளாவில் போக்குவரத்து வழித்தட அனுமதி கட்டணமும் மிக அதிகமாக உள்ளது."

"இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையே பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பாக, அரசு எங்களிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை. எனவே, தனியார் பேருந்து தொழிலைப் பாதுகாக்கும் வகையில் பர்மிட் கட்டணங்களைக் குறைக்கக் கோரியும், தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எடுத்துரைக்கவும் முதலமைச்சர் வி.டி.சதீசன் மற்றும் மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சரை விரைவில் நேரில் சந்தித்து முறையிடத் திட்டமிட்டுள்ளோம்," என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது கேரளாவிலும் அமலாக உள்ளதால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும், தனியார் பேருந்து உரிமையாளர்களின் இந்த எதிர்ப்பு அம்மாநில அரசியலில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.