தனியார் பேருந்து கட்டண உயர்வு... செப்டம்பர் 17-ல் உயர்மட்டக் குழு கூட்டம்  !

 

 டீசல் விலை உயர்வுக்கு ஏற்பத் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக முடிவெடுக்க வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற உள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

டீசல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதாலும், இலவச பேருந்து பயண அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். எனவே, டீசல் விலை உயர்வுக்கு ஏற்றவாறு பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனியார் பேருந்து கட்டண உயர்வு குறித்துப் பரிசீலித்து உரிய முடிவு எடுப்பதற்காக வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்படவுள்ளதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.