ரூ.400 கோடி தனியார் பள்ளி அங்கீகார மோசடி… 2-வது குற்றவாளியின் வங்கிக் கணக்கு முடக்கம்!

 

 

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி நடைபெற்றதாகச் சொல்லப்படும் ரூ.400 கோடிக்கும் அதிகமான பண மோசடி வழக்கில், 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள முத்துக்குமாரின் வங்கிக் கணக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சுமார் 170 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புகார்களின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், முத்துக்குமாரின் வங்கிக் கணக்கிலிருந்து மட்டும் சுமார் ரூ.4 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை

இதையடுத்து, முத்துக்குமாரின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ள போலீசார், அதில் நடைபெற்றுள்ள பணப் பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர். பணம் யார் யாரிடமிருந்து பெறப்பட்டது, எதற்காகப் பரிமாற்றம் செய்யப்பட்டது, வேறு நபர்களின் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் எங்கு சென்றது என்பது குறித்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.